×

திருப்பதி பிரம்மோற்சவ 7ம் நாளான இன்று; சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி


திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான இன்று காலை சூரியபிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 15ம்தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் 6ம் நாளான நேற்று மாலை புஷ்ப பல்லக்கில் மலையப்ப சுவாமி தேவி, பூதேவி தாயார்களுடன் மாடவீதியில் எழுந்தருளி பவனி வந்தார். தென்னை மரத்தின் ஓலைகளில் இருந்து பிரத்தியேகமான இந்த புஷ்ப பல்லக்கு 1 டன் எடையில் 6 வகையான மலர்களால் தயாரிக்கப்பட்டது.

தொடர்ந்து, நேற்றிரவு கஜேந்திர மோட்சத்தில் யானையை காப்பாற்றியதை நினைவுகூரும் விதமாக தன்னை சரணடையும் பக்தர்களை காப்பாற்றுவதாக சீனிவாச பெருமாள் தங்க யானை வாகனத்தில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, கோயில் யானைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதிஉலா நடந்தது.பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான இன்று காலை மலையப்ப சுவாமி சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து இன்றிரவு சந்திரபிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி வீதிஉலா நடைபெறும்.

₹2.27 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 69,821 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 26,098 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹2.27 கோடி காணிக்கை செலுத்தினர். இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 8 அறைகள் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் நேரடியாக சென்று தரிசனம் செய்தனர்.

The post திருப்பதி பிரம்மோற்சவ 7ம் நாளான இன்று; சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி appeared first on Dinakaran.

Tags : Tirupathi Brahmorchawa ,Malaiapaswamy Bhavani ,Suriya ,Thirumalai ,Navratri Brahmorsavam ,Tirupathi Elumalayan Temple ,
× RELATED பெரியகுளம் அருகே நாட்டு வெடிகுண்டு,...